Tuesday, 24 November 2015

அப்ப்ப்ப்ப்பா...நாலு சந்துகள் ஒன்றிணையும் தெரு முனையில் அமைந்துள்ளது அந்த டீக்கடை. பல ஆண்டுகளாக உள்ள அந்த டீக்கடையின் பெயர் பலகையில் ’கிருஷ்ணன்’ என்பது மட்டுமே நமது கண்ணுக்கு தெளிவாய் தெரிவதாய் இருந்தது. "நாயர் டீக்கடை” எனும் பிற்பகுதி பெரும்பான்மை அழிந்திருந்தது. பெண்கள் அதிகம் கடந்து செல்லும் தெரு என்பதால் எப்போதும் குறைந்தது நான்கு காளையர்கள் கூடி நிற்கும் இடமாகவும் அது திகழ்ந்தது. கடை உரிமையாளர் கொஞ்சம் சிடுமூஞ்சாய் இருந்த போதிலும், கடையில் வேலை செய்வோர் எல்லாம் அன்பானவர்களாவே இருந்தனர்.

வழக்கம் போல் காலை 11 மணிக்கு யாழினி டீ வாங்க கடைக்கு வந்திருந்தாள். கட்டட வேலை செய்யும் அவள், பூசு வேலைக்காக சிமெண்ட் பையை பிரித்து கொஞ்சம் சிமெண்டை அள்ளி தந்துவிட்டு, நேரமானதால் டீ வாங்க வந்திருந்தாள். உட்புறம் கரை படிந்திருந்த பழைய சொம்பொன்றை டீக்கடையில் வைத்துவிட்டு உடை, முகமென பரவலாக படர்ந்திருந்த சிமெண்ட்டை தட்டி விட்டுக் கொண்டிருந்தாள்...

காலைல சாப்டியாமா? பாப்பா எங்க காணோம்? என்ன பண்றான்?” டீயை போட்டவாரே டீக்கடை மாஸ்டர் பேச்சு கொடுத்தார்.

ம்.. சாப்டேன்ணே. எங்க அண்ணே சொல் பேச்சே கேட்க மாட்றான்... வேலைமேல ஒருமூலைல உட்கார வச்சிட்டு நாம வேலை செய்ய போனா மணல்லயும், தண்ணிலயும் விளையாடி ஜுரத்த வர வச்சிட்டு இருக்கான்... நேத்து நைட் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனா,  அவர் அப்படி திட்டுறாரு என்னய. ‘ரெண்டரை வயசு குழந்தைக்கு இவ்ளோ ஜுரம் வர வரைக்குமா விட்டு வச்சிருப்பீங்கனு...

கொழந்தனா அப்படிதான்மா இருக்கும்... எவ்ளோ நேரம்தான் அவன் தனிமைல நீ வருவனு காத்திட்டு இருப்பான்? போர் அடிச்சா விளையாட தானே போவான்... ஆமா. இப்போ எங்க இருக்கான் அவன்?”

வேலைக்கு வரணும்ல அதனால பக்கத்து வீட்டு கீதா அக்காகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்... என்புள்ள என்ன பாக்காம என்ன கஷ்டபடுதோ? ஜுரம் வேற... சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போய் என்புள்ளய பாத்துட்டு வரணும்ண. இல்லனா எனக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது..”

அப்பனா லீவு எடுத்துட்டு குழந்தைய பாத்துக்கலாம்லமா?”

மாத்திரை வாங்கக்கூட காசு இல்லண்ணே அதான். நைட் போய் திரும்ப டாக்டர வேற பாக்கணும்என்றாள் அவள்.

மாஸ்டர் ஒன்றும் பேசவில்லை...

கரைபடிந்திருந்த சொம்பில் டீயை வாங்கிக் கொண்டு சென்ற யாழினியின் இழுத்து மூடப்பட்ட முன்னழகையும், பின்னழகை டீக்கடை குட்டிச்சுவர் வெட்டிப்பயல்கள் கூட்டம் ரசிக்க ஆரம்பித்தது...


மச்சான் மச்சான். போறாடா அவ... போடா போய் பேசி எப்படினா நம்பர் வாங்கிடுடா. தனியா இருக்கவதான் செம ஃபீலிங்ஸ்ல இருப்பா

டேய். இவன் என்ன வம்புல மாட்டிவிடாம விடமாட்டான் போல... அவ சின்ன சிக்னல்கூட கொடுக்க மாட்டுறா. அவகிட்ட போயி பேச சொல்றான் இவன். ஓரத்துல கூட்டமா நாலு பேரு நிக்குறானுங்களே, இவனுங்க யாருனு கூட ஒருபார்வை பார்க்காம அவ போயிட்டு இருக்கா அவகிட்ட போய் நம்பர் வாங்க சொல்லுறான். மச்சான் இவன் பேச்ச கேட்டு நம்பர் போய் கேட்டா அவளோட தேஞ்சிப்போன செருப்பாலயே அடிப்பா...”

இது பெரிய ஜோக்காய் தெரியவில்லை தான் என்ற போதிலும் வெட்டிப்பயல்கள் கூட்டம் கொல்லென சிரித்தது...


ஐஸ்வர்யா ராயை போன்று அவ்வளவு அழகல்ல யாழினி. நீங்கள் அழகென்று கருதும் எந்த பிம்பத்திலும் அவளை பொறுத்தி பார்க்க முடியாது. மாநிறம்... சற்று சுருண்ட கேசம். உங்களது தேவதைக்கதை நாயகிகளை போலெல்லாம் இருக்கமாட்டாள். என்றாலும், கரியபெரிய விழிகளுடன் பேரழியாகவே காட்சி அளித்தாள் அவள்... உருண்டு திரண்ட அந்த விழிகளை பார்க்கும் யாருமே அவளை காதலிக்காமல் இருக்க முடியாது என்பது மட்டும் திண்ணம். 21 வயதுக்கான வனப்புடன் வனதேவதையே நகர கான்கிரீட் காட்டிற்குள் சிக்கிக் கொண்டதோ என அவளை காண்போருக்கு மாயை தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது.

கட்டட வேலை செய்யும் இடத்தில் கூட யாரிடமும் பெரிதாய் பேசாத யாழினிக்கான ஒரே ஆறுதல் டீக்கடை மாஸ்டர் தான். கணவனை இழந்து இரண்டரை வயது குழந்தையுடன் வாழ்க்கைக்கான போராட்டம் நடத்திவரும் யாழினியை காணும் போதெல்லாம், பிறந்த சிலமாதங்களிலேயே இறந்துபோன தனது பெண் குழந்தையின் நினைவு வந்துவிடும் மாஸ்டருக்கு. இருவருக்குமான அன்பு பிணைப்பென்பது கொச்சைபடுத்திவிட முடியாதபடி புனிதத்துவத்துடனேயே இருந்தது. பொதுவாக வெட்டிப்பயல்களுடன் தானும் வயது பையனை போல் அரட்டை அடிக்கும் மாஸ்டர், யாழினி விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் தள்ளியே ஒரு தந்தைக்குரிய கண்ணியத்துடன் நல்லவராய் நின்றார்.வேலைகளை முடித்துவிட்டு, மதிய உணவு இடைவெளியின் போது, சாப்பிடாமல் கூட குழந்தையை பார்க்க கீதா அக்கா வீட்டிற்கு வந்திருந்தால் யாழினி.

கீதா அக்கா... கீதா அக்கா...”

ஏ உள்ளே தான் இருக்கேன் வாடி

பையன் எங்கக்கா? என்ன பண்றான்? ஜுரம் எப்படி இருக்கு

அதோ அந்த மூலைல தூங்கிட்டு இருக்கான் பாரு... காலைல இருந்து காய்ச்சல் இல்ல. பசி போல ரொம்ப நேரமா அழுதுட்டு இருந்தான், அந்த டீக்கடையில பால் வாங்கிட்டு வந்து தந்தேன் குடிச்சிட்டு தூங்குறான்

அக்கா. அதலாம் எதுக்குக்கா கொடுக்கற? அது வெறும் பவுடருக்கா. கொழந்தைங்களுக்கு அவ்ளோ நல்லதில்ல

பச்சபுள்ள பசில அழுதா வேற என்னடி பண்ண முடியும்? வீட்ல வேற பால் பாக்கெட் இல்லடி அதான்

வீட்ல இருக்க பால் மட்டும் என்ன அவ்ளோ சுத்தமா என்ன? அதுவும் கலப்படம் தான்

எம்மா. உன் புள்ளைக்கு நீ தாய் பாலையே கொடும்மா.... இனிமே நான் எதுவும் வாங்கித் தரலை போதுமா? எல்லாம் அதிகபட்சம் இன்னும் 6 மாசம் தான்

என் புள்ளைக்கு 5 வயசாகுற வரைக்கும், நான் தாய் பால் தான் கொடுப்பேன்...”

அதுக்கு அப்பறம்? கல்யாணம் பண்ணி வச்சிடுவியா என்ன?” என நமிட்டு சிரிப்பு சிரித்தாள் கீதா அக்கா.

அவங்க அப்பா ஆசைப்படி, அவனுக்கு எது நல்லதோ அதைதான் வாங்கித் தருவேன். எதுசரியோ அதைதான் கத்துத் தருவேன்

ம்.... புள்ளைய நல்லா வளர்த்தா சரிதான்என்று பீடிகையை முடித்துக் கொண்டாள் கீதா அக்கா.

ரஹ்மான் கண்ணா.. என்ன பண்ணுற? தூங்குறியா??? என் செல்லக்குட்டிசிறிதுநேரம் குழந்தையை கொஞ்சிவிட்டு குழந்தையை மடியில் வைத்தவாறு சாப்பிட ஆரம்பித்தால்...

மதிய உணவை முடித்துக் கொண்டு யாழினி மீண்டும் கட்டட வேலைக்கு திரும்பினாள். செங்கற்களை குனிந்து எடுக்கும் போதெல்லாம் காய்ந்த மாடு போல வெறிகொண்டு மேயும் மேஸ்திரியின் பார்வையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள ஒவ்வொரு முறையும் சரியும் முந்தானையை சரிசெய்து கொண்டாள். ஒவ்வொரு முறை பேசும்போதும் வெளிப்படையாய் தெரியாதவாறு மேஸ்திரி இரட்டை அர்த்தத்துடனேயே பேசிவிட்டு பல்லை காட்டியவாறு அவளை நோக்குவார். அவள் எதுவும் நடக்காதது போல, கண்டுகொள்ளாமல் தனது வேலையை செய்ய ஆரம்பித்திருப்பாள்...யார்  இந்த யாழினி? ஏழைத்தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி வானுயர வளர்ந்திருக்கும் இந்த கான்கிரீட் காட்டிற்குள் இவள் எப்படி சிக்கிக் கொண்டாள்? யாருமற்ற அனாதையா அவள்? சொல்லப்போனாள் ஒருவகையில் அப்படிதான்...

இயற்கை எழிலை சிறுகசிறுக இழந்து நகரமயமாகி வரும் கிராமம் ஒன்றின் தமிழ் ஆசிரியரின் மகள் யாழினி. இசைத்தமிழை நினைவுகூறும் வகையில் தனது மகளுக்கு இனிமையாய் யாழினி என பெயரிட்டார் கந்தசாமி நாயக்கர். ஆம். தன்னை கந்தசாமி நாயக்கர் என சாதி அடையாளத்துடன் தான் அவர் எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொள்வார். ஆண்ட பரம்பரை மோகம் பேசும் சாதி கூட்டத்திற்கு மத்தியில், சாதி பெருமையுடம் தமிழின் சிறப்பையும் சேர்த்து பேசும் கலையை மட்டும் கத்துவைத்திருந்தார் கந்தசாமி. இனிமையாய் பேசும் தனது மகளுக்கு இசைக்கலையை பயிற்றுவித்த கந்தசாமி, தாய் மாமனான இசை ஆசிரியரையே அவளுக்கு மணம் முடித்துவைக்கவும் முடிவெடுத்தார். சொந்தம், சொத்து, சாதி என சகலமும் கூடிப்போனதால் 17 வயது கூட நிறைவடையாத பெண் என்ற போதிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்தன. ஆனால், ஒரு சிறுபெண்ணுக்கு, 35 வயதிற்கும் அதிகமான ஒருவனை மணக்க எப்படி மனம் வரும்?

தான் வேறொருவனை காதலிப்பதாகவும், அவனுடன் கண் காணா தேசம் போகப்போவதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் திருட்டு ரயில் ஏறி தனிமரமாக வந்தாரை வாழ வைக்கும் கான்கிரீட் காடு வந்து சேர்ந்தால் யாழினி. அவள் அனாதையான கதை இதுதான்...

---------------------------------

அதே நாலு சந்து முனை டீக்கடையில் டீ வாங்க வந்திருந்தாள் யாழினி. இன்று வெட்டிப்பயல்கள் கூட்டத்தை காணவில்லை. புதிதாய் ஒருவன் மட்டும் ஓரமாய் நின்று செல்போனில் உரக்க பேசிக் கொண்டிருந்தான்.

கேட்குதுங்கலா??? ஹலோ எனக்கு சிக்னல் இருக்கு உங்களுக்கு?”

ம்ம்ம்.. இப்போ கேட்குது. சொல்லுங்கமறுமுனையில்

நீங்க சொல்ற மாதிரிலாம் இல்ல. எல்லாமே நாம கத்துக் கொடுக்குறது தான்... குழந்தைங்க பொறக்கும் போது வெறும் தாளா தான் பொறக்குறாங்க. கூட இருக்க நாமலும், சமூகமும் தான் அவங்க மனசுல இல்லாதலாம் எழுதி வச்சிடறோம். அப்பறம் அவங்களையே குறை சொல்றோம்... ஹலோ... ஹலோ... ச்சீ... கட் ஆகிடுச்சிஎன திரும்பினான் கவுதம். 25 வயது நிறைவந்த இளைஞர். எப்போதும் பெரியாரையும், சேகுவராவையும், ஐன்ஸ்டைனையும் டீசர்ட்டாக போட்டு அலைபவன்.

யாழினி அவன் பேசுவதை செவி கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாள் -  அவளை அறியாமல் லேசாக புன்னகையித்தவாறு... இந்த வாசகங்கள் கூறவரும் பொருள் அவளுக்கு பழக்கமானது. அவளது கணவன் இதே போன்றதொரு தொனியிலான வசனங்கள் கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறாள்.

குழந்தைங்க பொறக்கும் போதே எல்லாத்தயும் கத்துட்டா பொறக்குறாங்க? நாம தான் அவங்களுக்கு நல்லது எது கெட்டது எதுனு சொல்லித்தரணும். நாம கெட்டத சொல்லி தந்துட்டு அவங்கள குறை சொன்னா எப்படி? என் பையன் பொறந்ததும் அவனுக்கு எது நல்லதோ அத மட்டும் தான் சொல்லித்தருவேன்என்று யாழினிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் அப்துல்.

இல்ல. எனக்கு பொம்பள பொண்ணுதான் பொறக்கும். அப்படியே என் அம்மா மாதிரி... என் அம்மா பாவம், ஒரு ராட்சஷன் கிட்ட மாட்டிகிச்சு, ஆனா, என் பொண்ணுக்கு உன்ன மாதிரி ஒருத்தன பார்த்து தேடி கண்டுபிடிச்சி கல்யாணம் பண்ணி வைப்பேன்...”

என்ன மாதிரி ஒருத்தனா? அது கஷ்டம் தான்

அது என்னமோ உண்மைதான். உன்ன மாதிரி ஒருத்தன் நீ மட்டும்தான்.” என அப்துல் நெஞ்சில் சாய்ந்து சிரித்தாள் யாழினி.

பொதுவாக அனைவரையும்நீங்கள், வாங்க, போங்கஎன மரியாதையுடனேயே பேசிப்பழகிய யாழினிநீ, வா, போஎன அதிகப்படியான உரிமையுடன், பேசும் ஒரே ஆள் அப்துல் மட்டுமே. ஒருவேளை கிராமிய சூழலில் இருந்து நகரத்தில் வந்து அவள் கற்றுக் கொண்டவைகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். பள்ளி படிப்பு இடையில் நின்று போன நிலையில், ரயில் ஏறி கான்கிரீட் காட்டில் மாட்டிக் கொண்ட யாழினி, ஆரம்பநாட்களில் முன்பின் தெரியாத அக்காக்கள் சிலருடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு ஒருவேலையையும் தேடிக் கொண்டாள். அவர்களில் ஒருவர் தான் கீதா அக்கா... அட்டைபெட்டிகள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்து சிறிய ஊதியமும் பெற ஆரம்பித்த யாழினி, குழந்தைபேறு இல்லாத கீதா அக்கா வீட்டின் மூலையிலேயே அவள் தங்கிக்கொண்டாள். கீதா அக்காவும், அவரது கணவரும் இத்தனை ஆண்டுகளில் வேண்டாத தெய்வமில்லை ஏறாத கோவில்களில்லை. தெய்வத்தின் மீதான நம்பிக்கை வற்றிப்போன நிலையில், நல்லவரான கீதாவின் கணவர் சுந்தரம், யாழினியை மானசீகமாக தனது மகளாகவே தாயுள்ளத்துடன் ஏற்றுக் கொண்டார். எல்லாம் நல்லபடியாக தான் போய்க் கொண்டிருந்தன.

கெமிக்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்து கொண்டிருந்த சுந்தரம் புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்துபோன நிலையில், அந்த குடும்பம் நொடிந்து போனது. கீதாவின் தம்பி பாலுவின் காதல் தொல்லை தாங்க முடியாமல், யாழினி ஹாஸ்டல் ஒன்றில் தஞ்சமடைந்தாள். இப்போது கீதா அக்கா அனாதையானால். நிலையென நாம் கருதும் வாழ்க்கை இப்படிதான் சிலசமயம் திடீரென சூறாவளிகளால் சிதைந்து போகிறது.

ஹாஸ்டலில் இருந்து வேலைக்கு செல்லும் வழியில் தான் முதன்முதலில் அப்துல்லை சந்தித்தாள் யாழினி. புயல் வேகத்தில் மோட்டர் சைக்கிளில் சென்றவனை கை நீட்டி திட்டினாள் யாழினி,

அறிவு இருக்கா??? குழந்தைங்களாம் விளையாடுற தெருல இவ்ளோ ஸ்பீடா போற? உங்க அப்பன் வீட்டு ரோடா?”

மோட்டர் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றிவிட்டு திரும்பி பார்த்தான் அப்துல். அவள் அத்தனை அழகு. ஒன்றும் பேசிக் கொள்ளாமல் மீண்டும் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு அலுவலகம் சென்றுவிட்டான்.

அப்துல் பிறப்பால் தான் இஸ்லாமியன், 5 வேலை தொழுகையோ, பெரிதாக இஸ்லாமிய மத நம்பிக்கைகளோ இல்லாதவன். ஏக இறைவன் என்பதில் மட்டும் ஒருநம்பிக்கை உண்டு அவனுக்கு. கடவுள் எங்கும் உள்ளவர் என்பதால் ஏன் மேற்கை நோக்கி தொழுகை செய்ய வேண்டும் என்று கேள்விகள் எழுப்பி மத தலைவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமெல்லாம் அவனுக்கு உண்டு. அவனளவில் இஸ்லாம் போதிப்பது அன்பையும், சகோதரத்துவத்தையும்... இது இரண்டையும் கடைபிடிப்போர் எல்லோருமே இஸ்லாமியர் தான் என அப்துல் உளப்பூர்வமான நம்புபவன்.

மோதலில் ஆரம்பித்த எல்லாமே காதலில் முடிவதாய் தானே தமிழ் சினிமா காலம்காலமாய் நமக்கு போதித்துள்ளது. அப்துல்யாழினி விசயத்தில் மட்டும் இது மாறிவிடப்போகிறதா என்ன? யாழினி குறித்த கதைகளெல்லாம் நண்பர்கள் மூலம் விசாரித்து அறிந்த அப்துல் அவளை காதலிக்கத் தொடங்கினான். சுய சாதி பற்றிற்காய் பெற்ற மகளின் வாழ்வையே சூறையாட துணிந்த தாய்-தந்தையரை நீங்கிய யாழினி மீது இயல்பாகவே அவனுக்கு மரியாதையும், ஈர்ப்பும் வந்தது. 

அப்துல்லின் நேர்மையான பேச்சு. நேர்கொண்ட பார்வை என சகலமும் பிடித்துப் போனது யாழினிக்கு. இருவரும் அப்துல்லின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் முடித்துக் கொண்டனர். யாழினி ஆசைப்படி அப்துல் அவளுக்கு தாலியொன்றை கட்டினாள். அவள் உச்சியில் பொட்டு வைத்துக் கொள்வதையோ, காலில் மெட்டி அணிவதையோ கூட அவன் தடை செய்யவில்லை. அவளது விருப்பங்களுக்கு அவன் மரியாதை செய்தான்... அதே பகுதியில் வீடொன்றை எடுத்து இருவரும் வசிக்கத் தொடங்கினர்.

அன்பும், காதலையும் மட்டுமே முதலீடாக்கி வாழ்வை துவங்கி இருவருக்குள்ளும் அப்படி ஒரு இணக்கம்... இப்படி சில இணைகளை பார்க்கும் போது தான் உண்மையிலேயே கடவுள் என்ற ஒன்று உண்டோ என்று கூட நமக்கு சந்தேகம் வந்துவிடும். என்றபோதும் இயற்கை தனது திருவிளையாடல்களை சீக்கிரம் நிகழ்த்தி கடவுள் என்ற ஒன்று மட்டுமல்ல அதன் மீது எழுப்பப்பட்டுள்ள கலாச்சார, மத கட்டுமானங்கள் கூட பொய் என நிருபித்துவிடும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமையில் உள்ள கீதா அக்கா வீட்டிற்கு சென்ற யாழினிக்கு கீதா அக்கா பத்திரிகை செய்தி ஒன்றை காட்டினாள்.

நீ வந்தா காட்டலாம்னு தான் இந்த பேப்பர எடுத்து வச்சிருந்தேன். எதோ ஒரு ஊர் கோர்ட்ல தீர்ப்பு தந்து இருக்காங்கலாம்மதம் மாறி திருமணம் செஞ்சிகிட்டவங்கல்ல 2 பேர்ல யாராச்சும் ஒருத்தங்க இன்னொரு மதத்துக்கு மாறிதான் ஆகனும், இல்லனா கல்யாணம் செல்லாதுனுகீதா அக்கா பேப்பர் துண்டை எடுத்து நீட்டினாள். வீடு திரும்பிய யாழினி வேலைமுடித்து வீடுவந்த கணவனிடம் பேயறைந்த பயத்துடன் முதலில் நீட்டியது அந்த காகிதத்துண்டை தான்.

அடி முட்டாள் பய மவளே. இந்த மாதிரி சட்டமெல்லாம் பணம் வச்சிருக்கவங்களுக்கு தான் தேவையா இருக்கும்... இந்த சட்டம்போட்டோ, இல்லனா தாலிய அறுத்தோலாம் நம்ப பந்தத்த பிரிச்சிட முடியுமா என்ன? எனக்கு உன்கூட இருக்கணும். வாழ்க்கைல அதுமட்டும் போதும்.” யாழினி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இந்த கணம் இதுபோதும் வாழ்வு முழுவதற்கும். உன்போல் ஒருவனுடன் வாழ்வதாய் இருந்தால் தாய்-தந்தையரை பிரிந்து வாழ்வதிலும் பொருளுண்டு.

பாமர மக்களின் மொழியில் சொல்வதாய் இருந்தால்யார் கண்ணு பட்டுதோ?” அவள் 5 மாத கர்ப்பிணியால் இருக்கும் போது ஒரு விபத்தில் அப்துல் கொல்லப்பட்டான். ஆம்... கொல்லப்பட்டான்.

இஸ்லாமிய மாமன்னன் ஒருவனுக்கு விழா எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மை மதத்தினர் நடத்திய போராட்டத்தில் மதவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் உயிரிழக்க நேரிட்டது. வன்முறையின் போது சுவர் ஒன்றின் மீதில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் மூண்டது...

வேலையை முடித்துவிட்டு தனது குழந்தையை சுமந்துள்ள அன்பு மனைவியை காண வேகமாக மோட்டர் சைக்கிளில் சென்ற அப்துல்லை வழி மறித்தது கும்பல் ஒன்று...

உன் பேரென்ன?”

அப்துல்.........................”

சொல்லி முடிப்பதற்குள் மண்டையில் ஓங்கி இருப்பு பழுப்பால் சிலர் தாக்குகினர். சுருண்டு விழுந்த அப்துல் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

வன்முறையில் இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டதாக ஆரம்பக் கட்டத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானாலும், பின்னர் அரசு தரப்பு வாதமான சாலை விபத்திலேயே இஸ்லாமிய இளைஞர் உயிரிழந்ததாக ஊடகங்கள் கிளிப்பிள்ளை பாடம் ஒப்பிக்கத் தொடங்கின. வன்முறையை தூண்டவே, வேண்டுமென்றே வதந்திகள் பரப்புவதாக காவல்துறை தலைவர் அளித்த பேட்டி, மீண்டும் மீண்டும் செய்திகளில் ஒளிபரப்பானது.

யாழினி சட்டப்போராட்டம் நடத்தினாள். ஏழைகளுக்கு இங்கு கிடைக்கக்கூடிய நீதி எப்படிபட்டது என் நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியது இல்லை. வக்கிலுக்கான காசுக்கே தாலியும் முழுகிப் போக பிள்ளையை காப்பாற்றினாள் போதுமென்ற மனநிலைக்கு வந்து சேர்ந்தாள் அவள்.

காதல் கணவனை இழந்த யாழினி இப்போது மீண்டும் அனாதை ஆனாள்... அவளுக்கு வாழ்வே இருண்டுவிட்டது. வாழ்க்கை குறித்த நம்பிக்கை கீற்றுகள் அவள் வானில் எங்கும் தென்படவில்லை. அராஜகம் நிறைந்த இந்த உலகில் இன்னொரு ஜீவனை எப்படி கரை சேர்ப்பது என அவள் அச்சம் கொண்டாள்... காலங்கள் நாம் நினைப்பது போல் அல்ல, அது ஓட்டம் பிடிக்கும் வேகத்தை சில நேரங்களில் நாம் அறியமுடியாமலும் போகலாம்.

5 மாதங்களில் அழகான ஆண் மகவொன்றை ஈந்தாள் யாழினி. குழந்தைக்கு தனது கணவனின் ஆசைப்படி, அவரது ஆசிரியரான ரஹ்மானின் பெயரையே சூட்டினாள். இஸ்லாமிய பெயரை கூறிய மாத்திரத்திலேயே உயிர் கொலைகள் நிகழும் தேசம் என தெரிந்த போதும், துணிந்து அவள் தனது மகனுக்கு ரஹ்மான் என பெயர் சூட்டினாள்... துணைக்கு யாரும் இல்லாத நிலையில், பக்கபலமாய் கீதா அக்கா இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் வீட்டின் அருகிலேயே அவள் குடிபோனாள்.

உலக பொருளாதார நெருக்கடி, அந்நிய முதலீடு என அட்டை கம்பெனி காணாமல் போனதை அறிந்த போது, வேறு வழியின்றி கட்டுமான வேலைக்கு போக தொடங்கினாள் யாழினி. குழந்தையை காப்பாற்ற அவளுக்கு வேறு வழி தெரியவில்லை... அவளது ஒரே ஆசை, வைராக்கியம் எல்லாம் கணவனின் ஆசைப்படி, குழந்தையை சரியான முறையில் சரியானவற்றை சொல்லி வளர்ப்பதும், அவனுக்கு அவன் விரும்பிய வாழ்க்கையை அமைத்து தருவதுமாகவே இருந்தது.

அப்துல் இறந்து ஓராண்டு கடந்த நிலையில்நீ வாழ வேண்டிய பொண்ணு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறது தான் நல்லது. குழந்தைய வச்சிட்டு தனியா கஷ்டப்படுவியாஎன கீதா அக்கா முதல் வேறு சிலரும் அவளை வற்புறுத்தி வந்தனர்.

இப்போது மீண்டும் கீதாவின் தம்பி பாலு, யாழினியிடம் பேச முயன்றான்... ‘நான் உன்ன இன்னமும் லவ் பண்றேன் யாழினி. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ கஷ்டப்படுறனு தெரியும். நீ படுற கஷ்டத்தலாம் அக்கா அப்பப்போ சொல்லுவா... நீ அப்பயே என்ன கட்டிட்டு இருக்கலாம். ஆனா இப்ப பாரு எப்படி ஆகிடுச்சி...”

ம்...” என அவன் பேசுவதற்கு எங்கேயோ கவனித்தவாறு உம் கொட்டினாள் யாழினி.

நீ என்கூட வந்துடு யாழினி. அந்த ஏரியால எனக்கு இன்னொரு வீடு இருக்கு அங்க தங்கிக்கோ... உன்ன யாரும் கேட்க மாட்டாங்க. என்னால கல்யாணம்லாம் செஞ்சிக்க முடியாது ஆனா, நான் அப்பப்போ வந்து உன்ன எந்த கஷ்டமும் இல்லாம பாத்துக்கறேன்...”

யாழினிக்கு செருப்பில் அடித்ததை போன்று இருந்தது. எனக்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை ஆனால், உனது இளமை, வனப்பு, அழகுநேரடியாக சொல்ல வேண்டுமென்றால் உடல் சதைப்பிண்டமான இந்த உடல் மட்டுமே- வேண்டுமென நேரிடையாக ஒருவன் சொல்வதை அவளாள் ஜீரணிக்க முடியவில்லை. கணமும் தாமதிக்காமல் அங்கிருந்து நீங்கினாள். வீட்டின் கழிவறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டவள் சிறிது நேரம் கதவை திறக்கவேயில்லை. ஒருமூலையில் உட்கார்ந்து அழுது தீர்த்திருப்பாள் போல... பின் முகத்தை கழுவிக் கொண்டு வீட்டுவேலைகளில் இறங்கினாள்...

கீதா அக்கா முயன்ற இடங்களில் எல்லாம் ஏமாற்றமே. மறுமணம் குறுத்து பேசும் இடங்களெல்லாம்விதவையான ஆண்களுக்கு பெண் தேடும் இடங்களாகவே இருந்தன. பெண்களை மட்டும் கைம்பெண்ணாக பார்க்கும் இந்த சமூகம் ஆண்களுக்கு ஏனோ விதவை அடையாளத்தை தருவதில்லை. 2 குழந்தைகள் பெற்று மனைவி இழந்த ஆண்கூட குழந்தை உள்ள ஒருபெண்ணை கட்டிக் கொள்ள தயார் இல்லை. கட்டிக் கொள்ள துணியும் சிலரும் பணத்தை எதிர்நோக்கினர். நாட்டில் உண்மையாகவே நல்லவர்கள் இருக்கலாம்... ஆனால், ஏனோ அவர்கள் கீதா அக்கா முயற்சித்த இடங்களில் இருந்திருக்கவில்லை.

இத்தனை சம்பவங்களை விளங்கிக் கொண்டால் மட்டுமே கவுதமை சந்தித்த நிகழ்வின் சாரம் நமக்கு புரிபடும். முற்போக்கு சிந்தனை கொண்ட கவுதம் காதலை உயிரென நினைப்பவன். அன்பு ஒன்றுதான் வாழ்வின் அடிப்படை வஸ்து என கருதுபவன். முதன்முதலில் டீக்கடையில் பார்த்த போது யாழினி குறித்து பெரிதாய் எதுவும் தெரிந்துவிடாவிட்டாலும், நாளாக நாளாக டீக்கடை மாஸ்டரிடம் அவள் குறித்து கேட்டறிந்தான். சுய கவுரவத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஒரு பெண் இதைத்தவிர வேறு என்ன வேண்டும் யாழினி மீது நேசம் கொள்வதற்கு? கவுதம் அவளை விரும்புவதையும், அவன் குறித்த நல்ல மதிப்பீடுகளையும் மாஸ்டர் யாழினியிடம் கூறியிருந்தார்.

நேரடியாகவே யாழினியிடம் சென்று தனது காதலை கூறிவிட முடிவெடுத்தான் கவுதம். செல்லரித்த நண்பர்களின் உலுத்துப்போன அறிவுரைகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு யாழினியிடம் நேரடியாகச் சென்றான்.

கவுதம் கூறிய எதையும் யாழினி முதலில் தனது காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை. அவளது வாழ்வில் இனி இன்னொருவர் இல்லை. பெண்களை உடலாக மட்டுமே பார்த்துபழகும் சமூகத்தில் ஒருவனை நம்பி இனி எப்படி தனது வாழ்வை பகிர்ந்து கொள்வது? சதைபிண்டம் மட்டும்தானா பெண்? என்னருமை வைரமுத்து சொல்கிறான், ‘விடிகாலை விண்ணழகு-விடியும் வரை பெண்ணழகு”... விடியும் வரைதான் பெண் அழகா???? விடிந்தபின்னால்??? உடல் மட்டும்தானா அவள்?

கவுதம் தீர்மானகராமவே இருந்தான். கீதா அக்காவை அணுகியவன், அவ்வ போது அங்கிருந்த ரஹ்மானையும் உளமாற கொஞ்சினான். யாருக்கு பிறந்திருந்தால் என்ன? பிள்ளை பிள்ளைதானே. பெற்றால் தான் பிள்ளையா? என்னவள், என் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் என ஒருத்தி ஆகும் போது அவளது எல்லாமுமே தானே நம்முடையது? அவளது கடந்தகாலம் உட்பட... உண்மை அன்பை நம்மைவிட குழந்தைகள் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு விடும். அதனால்தானோ என்னவோ கவுதமிடம் ரஹ்மான் ஒட்டிக் கொண்டான். அவனுக்கு அவ்வபோது தின்ன தின்பண்டங்களையும் வாங்கித்தந்தான் கவுதம்...

சில நாட்களுக்கு பிறகு...

அதிகாலையில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்ற யாழினி, தாலியெல்லாம் கட்டும் முன்னமே திருமண மண்டபத்தை விட்டு வெளிவந்திருந்தாள். சொல்லப்போனால் பெண்ணை உடைமையாக்க கட்டப்படும் தாலி மீது அவள் நம்பிக்கை  இழந்திருந்தாள். அருகேயிருந்த கோவில் குளத்தங்கரையில் குழந்தையை மடியில் ஏந்தியபடி அமர்ந்துகொண்டு, மலர்ந்துகொண்டிருக்கும் தாமரைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். குளத்தங்கரையின் பெரும்பாலான இடங்கள் உதிர்ந்து செங்கற்கள் தெளிவாய் தெரியும்படி இருந்தன. பாழடைந்திருந்த அந்த குளத்தில் இருந்த தாமரைகளோ சூரியனுக்காய் ஏங்குவதாய் அவளுக்கு ஒரு எண்ணம். திருமண நிகழ்விற்கு வந்திருந்த கவுதம் குளத்தங்கரையில் யாழினி உள்ளதை அறிந்து அங்கேயே வந்துவிட்டான்...

என்னதான் சொல்றீங்க யாழினி... இப்படி குளத்தை பார்த்துட்டு தான் இருக்க போறீங்களா?”

தலையை திருப்பி பார்த்த யாழினி சிறிது புன்னகையித்தாள்.

இதெல்லாம் சரிபட்டு வரும்னு நெனைக்குறீங்களா?” – யாழினி

ஏன் சரிபட்டு வராது? நீங்க நீங்களா இருக்க ஒருபோதும் நான் தடையா இருக்க மாட்டேன். நீங்க விருப்பப்பட்டிங்கனா உங்களுக்கு திருப்தி அளிக்கும்னா என் கொள்கைகளை மீறி, நான் தாலிகட்டி கூட திருமணம் செஞ்சிக்க தயாரா இருக்கேன். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு கயிறுதான்.”

எனக்கும் தான்... அதுவெறும் கயிறுனு தானே கழட்டி எறிய சொல்லிட்டாங்க...” லேசாக கண்கலங்கினாள்.

தயவு செஞ்சி அழாதீங்க... ப்ளீஸ்

சிறுதுநேரம் இருவரும் மவுனித்திருந்தனர்.

சாப்டீங்களா நீங்க?”

இல்லை... நீ சாப்டீயா? சாரி... நீங்க சாப்டீங்களா?”

கவுதம் மீது நேசம் இருந்த போதும் அவள் அதை  காட்டிக் கொள்ள தயாராயில்லை.

கவுதம் கடையில் இருந்து வாங்கி வந்திருந்த சாக்லெட் ஒன்றை ரஹ்மானிடம் நீட்டினான். அதை அவனும் அன்புடன் வாங்கிக் கொண்டான்...

குழந்தைக்கு இதெல்லாம் கொடுக்காதீங்க. குழந்தைகளுக்கு எது நல்லதோ அதைத்தான் சொல்லித் தரணும், அதைத் தான் அறிமுகப்படுத்தனும்என்ற யாழினி, வேலைக்கு நேரமாவதால் வீட்டிற்கு கிளம்பினாள். கவுதம் அங்கேயே அசையாமல் காத்துக் கிடந்தான்.

ரஹ்மானை தூக்கியபடி, குளத்தின் கடைசிப்படி ஏறி, யாழினி செல்லும் போது, கவுதம்மை நோக்கி ரஹ்மான் கையை நீட்டிஅம்மா....: என்றான். அவரை விட்டுவிட்டு செல்கிறோம் என சொல்ல முயற்சிக்கிறான் போல. குழந்தைக்கு அவரை எப்படி சுட்டிக்காட்டுவது என தெரியவில்லை. கவுதம் எனும் பெயரோ வாயில் நுழையக்கூடியதாகவும் இல்லை...

நடப்பவற்றை கவுதம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். யாழினி அவனை நோக்கி திரும்பினாள்... நீட்டிய கையை ரஹ்மான் இறக்கவே இல்லை. இப்போது கவுதமை நோக்கி யாழினி விரல் நீட்டினாள். சரியான ஒன்றை அடையாளம் காட்டும் சுட்டல் அது.

அப்பாடா செல்லம்... அப்பா சொல்லு

அப்ப்ப்ப்ப்பா......”

எங்கோ தூரத்து டீக்கடையில் காலைநேர கானம் இசைக்கத் தொடங்கியது. மென்மையான பெண் குரலில் காற்றில் கசிந்த அந்த கீதம், அனைவரின் காதுகளிலும் விழுகிறது...

“...... இனி வாழ்வில் எல்லாம் சுகமே...
நீ சூரியன் நான் தாமரை - நீ வந்தால் தானே மலர்கிறேன்............”

Monday, 23 November 2015

மனமெங்கும் பட்டாம்பூச்சிகள்


என்று வருமோ இந்த தருணம் என ஏங்கிக் கிடந்தான் அவன். இந்த கணத்திற்காக எத்தனை நாட்கள் தவமிருந்திருப்பான்? இந்த கணம் தன்வாழ்வில் நேரிடும் என்பதையே அவன் பெரும்பாலான நேரங்களில் நம்பியதில்லை... ஆம்... வெட்கம் நீங்கி, பெண்கள் ஆண்களின் காதலை ஏற்கும் நிகழ்வு எத்தனை அரிய ஒன்று!!!


இருவரும் குழப்பத்துடன் மெதுவாய் கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தனர். அவன் எதுவும் பேசவில்லை, அவளும் எதுவும் பேசவில்லை... அவள் என்ன நினைத்தாளோ? திடீரென அவனை இறுக்கி அணைத்து, அவனது நெற்றியில் முத்தமிட்டாள். கணமும் தாமதிக்காமல் அவனிடம் கூறினாள், “ஐ லவ்யூ கார்த்தி... “ அவள் கண்கள் இத்தனை நாட்கள் பேசியதை - இத்தனை நாட்கள் தான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதை தகர்த்து - தன் காதலை முதல்முறையாக வாய் திறந்து கூறினாள்...

இந்த 3  வார்த்தைய நான் சொல்வேன்னு எத்தனை நாள் காத்திருந்திருப்ப?” என கண்களின் கண்ணீர் கசிய சிரித்தாள்- உண்மையில் அழுதாள்...

ஒரு 25 வயது இளைஞனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? குழப்பங்கள் நீர்குமிழி போல் சட்டென்று உடைந்து மாயமானது... கடற்கரையின் அந்த நீல வானம் நொடிக்குள்ளாக வானவில்லாகியது... வண்ணங்களில் அது புது பூப்பூத்தது. மணலில் அவன் கால்கள் மிதப்பதாய் உணர்ந்தான்... இனியா வாயில் இருந்து இந்த இனிய வார்த்தை மலர அவன் ஏங்காத நாளில்லை. அவளது இதழ் பட்ட அந்த நொடியே அவனது ஒவ்வொரு செல்லும் சில்லிட்டது... காதில் யாரோ அறைந்தது போன்றதொரு ஓசை, காதிற்குள் தீராத ரீங்காரம்... உலகே இருண்டதாய் ஒரு உணர்வு...

பெண்கள் வெட்கத்தை விட்டு, ஆணவம் நீங்கி காதலை சொல்வது என்ன அவ்வளவு எளிய காரியமா என்ன??? பொங்கிப் பெருகும் காதலை அவர்கள் கண்கள் உணர்த்தும் போதும், ”அப்படிலாம் இல்லையே...” என்பதாகவே எல்லாவற்றையும் தனக்குள் மறைத்துக் கொண்டு அவர்கள் எளிதாய் கடந்து சென்றுவிடுவதுண்டு...

நடப்பவற்றை அவன் அனுமானிப்பதற்குள், நிதானிப்பதற்குள் இனியா கடற்கரை மணலில் தனது காலடி தடத்தைப் பதித்து கண்ணீருடன் வேகமாக அவனை நீங்கிச் செல்ல ஆரம்பித்தாள்...

கல்லூரி விடுதிக்கு செல்வதற்காக அவள் பேருந்து நிலையம் நோக்கி செல்ல, இவன் நகரவேயில்லை... காந்தி சிலையை போல், கடற்கரை மணலில் இவனும் சிலையாக... பூரணத்துவம் பெற்ற உணர்வுடன் அவளையே அசைவில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்... தூரத்து வெளிச்சமாய் அவளது பிம்பம் மறைந்தது...

வைரமுத்து கூறுவது போல், இப்போது அவன் முதுகில் மின்னல் வெட்டியதை போன்றதொரு உணர்வு... எகிறி குதித்தான்... வானத்தை தொட்டுவிடும் ஆவேசம் அவனிடம் காணமுடிந்தது... அங்கும் இங்கும் ஓடினான். கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் தலையை கோதிவிட்டு மகிழ்ந்தான் - தானும் ஒரு குழந்தையாக... நடந்தவற்றை அவனால் நம்பமுடியவில்லை, திடீரென மின்னலின் வெளிச்சம் போல் வாழ்வில் வந்தவள், தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வெளிச்சமாக்கும் ஆதவன் ஆவாள் என...

அப்போது...

தலைகால் புரியாமல், நடையும், ஓட்டமுமாய் உற்சாக மிகுதியில் தன்னை நோக்கி சிரித்தவாறு கடந்து செல்பவனை நோக்கி குடைக்குள் இருந்த அந்த பெண் கேட்டாள், “உட்காருறியா?”

அந்த குரல் தொனியின் பொருள் அவனுக்கு சற்றே தாமதமாக விளங்கினாலும் அவன் சுதாகரித்துக் கொண்டு, மிதிக்கக்கூடாத எதையோ காலால் மிதித்தது போன்ற முகபாவனையுடன் இல்லை...” என கடந்துச் சென்றான்...

கடற்கரையில் மெல்ல இருள் சூழ்ந்தது... கடற்கரையை பொறுத்தவரை இது உடல் பசிக்கான நேரம்... மனங்கள் அற்ற, மனிதம் மடிந்த உடல்கள் அங்கு சதைப்பசிக்காக அலைந்து கொண்டிருந்தன.  மணக்கும் மல்லிகையுடன் இரவு நேர அழகிகள் மணலில் குடையுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் காமம் எனும் அழகியலை அனேகமாக மறந்தேக்கூட போயிருக்கலாம். அவர்களின் காதல் என்பதோ எப்போதோ மறித்துவிட்டது... பணத்திற்காக முத்தடமிடவும், காமகளியாட்டம் புரியவும் அப்பெண்கள் மட்டும் ஆசைப்பட்டு இருப்பார்களா என்ன? 100வது முறையாக ஒரேபடத்தை காண்பது போன்ற சுவையற்று அவர்கள் அமர்ந்திருக்க, அவன் மட்டும் கடற்கரையில் முகம் மகிழ்ந்து ஒளிர்ந்துக் கொண்டிருந்தான்...

கார்த்தி மெல்ல நகர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் தன்னுடைய அறைக்கு புறப்பட்டுச் சென்றான்... அவனது எடையை அவன் இன்னும் உணரவில்லை... அவனது கால் அனேகமாக பூமிக்கு 3 அடிகளுக்கு மேலாகதான் இருக்க வேண்டும். அவனுடன் சேர்ந்து அவனது இருசக்கர வாகனமும் ஈர்ப்பு விசைக்கு எதிராய் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது எனலாம், அப்படி ஒரு வேகம்... அவள் முத்தம் தந்தபோது எரிய ஆரம்பித்தபல்ப்அவனது முகத்தில் இருந்து இன்னும் மறையவில்லை. பொதுவாக அனைத்தையும் தத்துவ விசாரணை செய்யும் அவன், இன்று எதுகுறித்தும் யோசிக்கவில்லை. பூரண ஜென்நிலையை அடைந்தவன் போல வார்த்தைகளற்று மௌனியாகிவிட்டான்.

ஒரு பெண் தன் காதலை ஏற்கும் அந்த மந்திர கணத்தில் ஒரு ஆணுக்குள் என்னவெல்லாம் நிகழ்கின்றன??? அவன் தனது சுயத்தை உணரும் போதி மர தருணம் அது. அவன் தனது பொறுப்புகளை உணரும் தருணம். தன்னை அவன் ஒரு முழு ஆணாக உணரும் பூரணத்துவ கணங்களில் அதுவும் ஒன்று... ஒரு பெண் தன்னை முழுமையாக நம்புகிறாள், தனது வாழ்வையே ஒப்புக் கொடுக்க துணியும் அளவு அவள் நம்புகிறாள்... இதற்குமேல் என்ன வேண்டும் ஒரு ஆணுக்கு??? அவனது இருப்புக்கு இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது ஒருதேவை எழுந்துள்ளது, புது அர்த்தம் பிறந்துள்ளது. அவனில்லாமல் இன்னொரு உயிரில்லையெனும் அழகிய சூழல்.... இனி அவன் வாழ்வில் நிதானிக்க வேண்டும். ஒவ்வொன்றையும் நிதானமாக செய்ய வேண்டும்... ஆனால், அவள் முத்தமிட்ட கணத்தில் ஏனோ அவனால் நிதானித்திருக்க முடியவில்லை?

இந்த முத்தம் ஆணின் உடலில் காமத்தை மட்டும் தான் தூண்டுமா??? இது குறித்து நிச்சயம் நான் ஏதும் அறியவில்லை... ஆனால், ஒன்றைமட்டும் நானறிவேன், ஒரு பெண் நெற்றியில் முத்தமிட்ட கணத்தில் அவள் அவனுக்கு தாயாகிறாள்... முத்தம் அங்கு முத்திக்கு வழிகோலுகிறது... அவனது ஒட்டுமொத்த ஆணவமும் அந்த பெண்ணின் காலடியில் சரணடைய செய்யும் அளவு நெற்றியில் இடும் முத்தம் வலிமை வாய்ந்தது... அது சலனமில்லாத தூய அன்பின் பரிபூரண வெளிப்பாடு...

பேருந்து நிறுத்தத்தில் எதேச்சையாக கண்ட ஒருபெண் வாழ்க்கையை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆச்சரியம் சிலரது வாழ்வில் மட்டுமே முத்து முகிழ்வது போல நிகழ்கிறது... புத்தகத்திற்கே பிறந்தது போல, சதா சர்வகாலமும் புத்தகமே வாழ்க்கையான அவன், பேருந்து  நிறுத்தம் அருகே பேருந்திற்காக காத்திருக்கும் நேரத்திலும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்... உச்சிவெயிலில் ஆர்வமுடன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் அந்த வித்யாசமானவனை கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்த அவளும் வித்யாசமாக குறுகுறுவென நோக்கிக் கொண்டிருந்தால், இருவரின் முதல் சந்திப்பு அதுதான். இந்த பெண் ஏன் தன்னை இப்படி பார்க்கிறாள் என பார்த்தவன் பாவையின் ஆள் திண்ணும் அந்த பார்வைக்கு இரையாகிப் போனான்...

ஒருதாளின் அலைபேசி எண்ணை எழுதி அவள் காணுமாறு பேருந்து நிறுத்தத்தின் ஒருமூலையில் வைத்துவிட்டு அவன் சென்றுவிட்டான்... அவனுக்கு நிச்சயம் தெரியும் அவள் அந்த தாளை நிச்சயம் எடுப்பால் என ... 10 நிமிடங்களுக்குள்ஹாய்என ஒரு குறுஞ்செய்தி...

இனியாவுடனான ஆரம்பக்கால சகவாசம் இப்படி ஏற்பட்டது என்றாலும், அவளை சதாசர்வ காலமும் காதல் தொல்லை செய்து கொண்டிருந்த சுருட்டை முடிக்காரனிடம் இருந்து காப்பாற்றிய போது அவர்களின் நெருக்கம் அதிகமானது...

நீ யாரு இதலாம் கேட்க... அவ எங்க ஊரு பொண்ணுஎன சுருட்டை முடிக்காரன் கூறிய போது,

நாங்க 2 பேரும் லவ் பண்றோம்... இதுதான் உனக்கு கடைசி வார்னிங்... அடுத்தவாட்டி நான் வாயால பேசிட்டு இருக்க மாட்டேன்என கார்த்தி எச்சரிச்சதாக அறிந்த கணத்தில் இனியாவுக்குள்ளும் ஏதோ செய்ய ஆரம்பித்தது... நெஞ்சுக்குள் வண்டு ஊறுவது போன்றதொரு குறுகுறுப்பு அவளுக்கு... ஆம்... அவனை அவளுக்கு முன்னிலும் அதிகம் பிடித்துப் போனது...

தனக்காய் ஒருவன் துணிந்து மல்லுக்கட்டுவது எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது???

பொதுவாய்  வாயைத் திறந்தால் மார்க்ஸ் தொடங்கி பரமகுடிகாரன் படங்கள் மீதான விமர்சனம் வரை பேசுபவன், அவளிடம் மட்டும் தபுசங்கர் கவிதைகளைப் பேசிப்பழகினான்... இவை எல்லாம் அவனுக்கும் வித்யாசமாய் தான் இருந்தன...

எல்லா ஆண்-பெண் நட்பை போலவும், வாட்ஸ் ஆப் சாட்டிங், இரவுநேர கடலைகள் என நீண்டது அவர்களின் உறவும்... தனியார் கார் நிறுவனத்தின் மென்பொருள் தொடர்பான பிரிவில் பணிபுரியும் கார்த்தி அவளுக்காய் லோனில் பிளாட் ஒன்றை வாங்க முடிவெடுத்தான். அவள் வீட்டில் அவளை வைத்திருந்தற்கு இணையாக இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த அளவு அவளை சிறப்பாய் பார்த்துக் கொள்ள துணிந்தான்... தன் காதலுக்கான காதல்கோட்டை வாங்க முடிவெடுத்த போது முகிழ ஆரம்பித்தது பிரச்சனைகள்...

ஏதோ ஒரு பையன் கூட பேசிட்டு இருக்கியாமே??? உன் தங்கச்சி சொன்னா... அந்த சாதிக்கார பையனா தான் இருக்கும்னும் சொல்றா??? உங்க அப்பா பத்தி தெரியும்ல, நம்ப எல்லோரையும் கொளுத்துனாலும் கொளுத்துவாரே தவிர இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு... அவருக்கு கௌரவம்தான் முக்கியம் எல்லாத்த விட... பெத்த பொண்ணுங்கள விடவும்அம்மா இனியாவிடம் இப்படிதான் செல்போனில் தேனொழுக இனிமையாய் பேசினாள்... (கௌரவ மயிரான்கள்...)

இனியாவுக்கு புரிந்துவிட்டது, தனது கனவுகளில் எதுவும் பலிதமாகப் போவதில்லை என... அன்பே வடிவான காதலனிடம் இதை புரியவைத்துவிட அவள் துடித்தாள்...

அவனிடம் போனில் நேராய் சொல்ல துணிவில்லை...ஒரு குறுஞ்செய்தி கார்த்தி இத்தோட கவிதைலாம் சொல்லி என்ன கொல்லாதீங்க... எனக்கு இதெல்லாம் சரிபட்டு வரும்னு தோணலை

என்ன நடந்தது என அவள் விளக்கவும் இல்லை, அவன் கேட்கவும் இல்லை. அவனை பொறுத்தவரை, ’அவளுக்கு என்னை பிடிக்கவில்லை!’... அவ்வளவுதான்

அவனது அடுத்தமாத செல்போன் பில் பாதியாகிப் போனது... இருவரின் நெருக்கமோ நூறில் ஒன்றாகிப் போனது... நல்ல வேளையாக அவனுக்கு என ஒரு போதை இருந்தது, காதல்கண்ட தருணத்தில் தூக்கிப் போட்டிருந்த அந்த போதை வஸ்துவை இப்போது கைகளில் அவன் எடுக்கலானான்அது புத்தகம்!!!

புதிதுபுதிதாய் உலக தரிசனங்களை வழங்கவல்லது புத்தகம் படிக்கும் போதை... சிறந்த மனிதர்களின் அனுபவம் சார்ந்த நூல்கள் நமது உணர்வுக்கடலை தூண்டிவிட்டு இல்லாத உலகில் நம்மை உலவச் செய்யும் மாயம் நிகழ்த்தக்கூடியது... அதை கார்த்தி மீண்டும் பருகலானான்... ஆனால், அவளது நிலை?

தனியறையில் ஒருமூலையில் எப்போதும் அவன் நினைவாய்... ’எவனோ ஒருவன் வாசிக்கிறான்பாடல் முதல் ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனேஎன ரஹ்மான் இசையிடம் தஞ்சமடைந்தாள் அவள்!!! பாடலின் ஒவ்வொரு வரியும் அவனையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தன... பழைய வாட்ஸ் ஆப் கடலைகளை மீண்டும் மீண்டும் எடுத்து பார்த்து அழத்தோன்றும் இரவுகள் எல்லாம் இன்னொரு நரகமாய் கழிந்தது என்றால், பகல்களோ நெருப்புக்குள் தூக்கி வீசியது போன்று நினைவுகளால் வாட்டியது...

சாப்டியா?’ என அவன் அனுப்பும் குறுஞ்செய்திக்காய் இவள் காத்துக்கிடந்தாள் கால-வெளி வர்த்தமானங்களை மறந்து... இவளின் பதில் செய்தியில் ஒருபுள்ளி இல்லாவிட்டாலும் இவள் என்ன மனநிலையில் உள்ளால் என புரிந்து கொள்ளும் அளவு கார்த்தி நெருக்கம். இத்தகைய நெருக்கம் இனி இன்னொருவரிடம் ஏற்படுமா என இனியாவுக்குள் இயல்பான அச்சம் பரவத் தொடங்கியது..

 நடந்தவற்றை கார்த்தியிடம் சொல்ல முடிவெடுத்தால் அவள்... போனை எடுத்து டயல் செய்தால்...

கார்த்தி எங்க இருக்க?”
ஆபிஸ்ல.....”

நான் பீச்ல உனக்காக காத்துட்டு இருக்கேன்... சீக்கிரம் வந்துடு... காந்தி சிலை பின்னாடி...”

ஏன்? எதற்கு? என கார்த்தி கேட்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது... குழப்பங்களுடன் மின்னல் வேகத்தில் கார்த்தி மெரினா நோக்கி பயணமானான்..

ஒருவேள வீட்ல பையன் பார்த்துட்டு இருப்பாங்களோ? பத்திரிகை கொடுக்க போறாளோ?”

இல்ல... இவனை தான் லவ் பண்றேன்னு வேற யாரையாச்சும் அறிமுகப்படுத்திடுவாளோ? அதுக்கு ஏன் சம்மந்தமே இல்லாம இவ்ளோ அவசரமா கூப்பிடுறா??? ச்சீ..ச்சீ...அப்படிலாம் இருக்காது...”

பைக்கை முறுக்கிய வேகம் தான் நமக்கு தெரியும், அது பறந்ததோ? பற்றி எரிந்ததோ? நமக்கு தெரியாது... அவள் கடற்கரையை சொர்க்கமென பரவசத்துடன் விளையாடும் குழந்தைகளை ரசித்தவாறு ரஹ்மானின் மெல்லிசையில்மருதாணிதொடங்கி வி.டி.வி. “மன்னிப்பாயாவரை 6 பாடல் கேட்டு முடிப்பதற்குள் எங்கிருந்தோ மின்னலென வந்து சேர்ந்தான் அவன்... பைக் கண்ணாடியை பார்த்து தலைகோதி விட்டுக் கொண்டதுடன், சட்டையை ஒழுங்குபடுத்திக் கொண்டு  அவளின் முன் சென்றான்.. நல்லவேளை கூட யாரும் இல்லை... ’மௌனம் பேசியதேத்ரிஷா போல யாரையும் அவள் அறிமுகப்படுத்தப் போவதில்லை என உறுதிபடுத்திக் கொண்ட போது, வேறு என்னவாக இருக்கும் என்ற பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது...

சொல்லு... என்னாச்சி??? ஏன் அவ்ளோ அவசரமா கூப்ட

எனக்கு கடல் தண்ணில கால் நனைக்கனும்...”

இதுக்கு தான் கூப்ட்டியா?” என ஒரு பார்வை பார்த்தான்...

இருவரும் மெல்ல கடலை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்... இவனுக்கு நிச்சயம் தெரியும், சொல்ல வேண்டிய விஷயம் ஏதோ உள்ளதென... குழப்பத்துடன்தான் அவளுடன் கடலை நோக்கி பொடிநடை போட்டான்.. பாதி தூரம் செல்வதற்குள் அவள் அவனை இறுக அணைத்தாள்... நெற்றியில் முத்தமிட்டுஐ லவ்யூ கார்த்தி...” என கண்களில் கண்ணீர் பெருக கூறினாள்... “இந்த 3  வார்த்தைய நான் சொல்வேன்னு எத்தனை நாள் காத்திருந்திருப்ப?”.... இதற்கு மேல் அவளாள் நிதானிக்க முடியவில்லை... மூச்சு முட்டியது... மேற்கொண்டு எதையும் சொல்லும் வலிமை அவளுக்கு இல்லை... சொல்லவந்ததை சொல்லாத போதும், சொல்ல எண்ணாததை அனிச்சையாய் வெளிப்படுத்தினாள்... மனதில் உள்ள காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சி இருந்த போதும், இதுநிறைவேறப் போவதில்லை எனும் பயங்கரம் அவளது கண்களில் கண்ணீரை பீறிடவைத்தது... சோகத்துடனே விடுதிக்கு திரும்பினாள்...

சில நிமிடங்கள் சிலையாக உறைந்தவன் சுதாகரித்துக் கொண்டு தனது அறை செல்ல ஆயத்தமானான்... “வானம்... பூமி... கடல்... ஒளி... இல்லை இல்லை... அவள் வெளிவைரமுத்துவுக்கு போட்டியாக இன்னொருவன் உருவாகிவிடுவானோ என அச்சப்படும் அளவு ஏதேதோ உளறல்களை கேட்கமுடிந்தது அவனிடம்...

தனது அறைக்கு திரும்பும் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றவாரே அவளுக்கு தொடர்ந்து செல்போனில் அழைக்கத் தொடங்கினான்... கையில் போனை வைத்திருந்த போதும், அவள் அவனது அழைப்புகளை ஏற்கவில்லை... அவள் விடுதி திரும்பிய போது 21 தவறிய அழைப்புகளை செல்போன் காட்டியது... தவித்தது போதும், சொல்லிவிடுவதே உத்தமம் என முடிவெடுத்தாள் அவள்...

கார்த்தி... நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். ஆனா, எங்க வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க... எங்க அப்பாக்கு சாதிசனம் தான் எல்லாமே. கவுரவுத்துக்காக தான் என்னை சென்னைலயே படிக்க வைக்குறாரு. அவர் சொந்த்ததுல பொண்ணுங்க யாரும் இவ்ளோ படிச்சது இல்ல... நான் ஆசைபட்டது எல்லாத்தையும் கேட்காமலே செஞ்சவரு என் அப்பா... நான் ஆசைபடுறேன்னு தெரிஞ்சாலும் இதை மட்டும் ஏத்துக்க மாட்டாரு...” என சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது...

எனக்கு என்ன கொறச்சல்? அழகா இல்லையா? இல்ல படிக்கலையா? வேலைக்கு தான் போகலையா? கைநெறைய சம்பாதிக்குறேன். உங்கள மாதிரிலாம் குடும்ப சொத்து இல்ல தான்... இருந்தாலும், இன்னைக்கு நான் போடுற டிரஸ்ல இருந்து, சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எல்லாமே என் உழைப்பு... அந்த பெருமை, கவுரவம், சந்தோசம் எனக்கு எப்பயும் உண்டு... நான் எவன் காசுலயும் வாழல இனியா... நான் உன்ன நல்லா பாத்துக்க மாட்டேன்னு நீ நெனைக்குறியா? ” அவனது குரல் தழுதழுத்தது.

உன்ன விட யாராலையும் என்ன இவ்ளோ அன்பா பார்த்துக்க முடியாது. கண்ணுல வச்சி தாங்க முடியாதுனு தெரியும் கார்த்தி... எனக்கு ஒன்னுனா நீ துடிச்சி போயிடுவ... ஆனா, என்னால நீ எதுக்கு கஷ்டப்படனும்?”

உனக்காக எதையும் செய்ய இப்ப மட்டும் இல்ல எப்பயும் தயாரா தான் இருக்கேன்

எங்க வீட்ல வேற சாதி பையனுக்கு நிச்சயம் தரமாட்டாங்க கார்த்தி... எங்க அக்கா ஒருத்தி- பெரியம்மா பொண்ணுவேற சாதி பையன காதலிச்சானு கொன்னுட்டாங்க. எங்க பெரியப்பா அவளை விஷம் கொடுத்து கொன்னுட்டு வயித்துவலி தாங்காம விஷம் குடிச்சிட்டானு போலீஸ்ல சொல்லி கேச முடிச்சிட்டாருசொல்லி முடிக்கும் முன்னையே அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..

அப்ப நான் சின்ன பொண்ணு கார்த்தி. அக்கா அவ்ளோ அழகு... அவ்ளோ அன்பானவ.... அவள கொல்ல எப்படி மனசு வந்துச்சி அவங்களுக்கு??? என்ன எப்பயும் கொஞ்சிட்டே இருப்பா என் அக்கா... கடைக்கு கூட்டிட்டு போயி சாக்லேட்லாம் வாங்கித் தருவா அவ...” மீண்டும்  அழத் தொடங்கினாள் இனியா...

நாம 2 பேரும் சேருரதுக்கு ஜாதி தான் தடையா இருக்கும்னா நம்ம 2 பேரும் சேருறத யாராலையும் தடுக்க முடியாது இனியா

அவளுக்கு புல்லரிப்பதை போன்றதொரு உணர்வு... இவன் தனக்காக இறுதிவரை போராடுவான் என்பதை அறியும் போது அவளுக்கு கால் தரையில் நிற்கவில்லை... அவன் கூறுவது நடக்கப்போவதில்லை என புத்தி கூறினாலும் மனதிற்குள் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை குரலெழுப்பிக் கொண்டிருந்தது...

ஒரு மனுசன அளவிடுறதுக்கு சாதி தான் அளவுகோலா? இதுவரைக்கும் நான் எவ கிட்டயும் கொஞ்சி பேசுனதோ, கடலை போட்டதோ இல்ல... நான் நெருக்கமா பழகுன முதல் பொண்ணு நீதான். கடைசி பொண்ணும் நீதான்... உங்க ஊர்ல தானே நம்பள வாழ விடமாட்டாங்க? நாம தான் சென்னைல இருக்கோம்ல... இங்கயும் உனக்கு பயமா இருந்தா நாம எங்கயாச்சும் போயிடலாம்யாருக்கும் தெரியாத தேசமா” என அவன் அவளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் ஊட்டினான்...

அவள் மௌனத்தில் மூழ்கியிருந்தாள்...

நீ தந்த அந்த முத்தம். அதுபோதும் சாகுற வரைக்கும் எனக்குஅவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது...

அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்...

எதுவா இருந்தாலும் யோசிச்சி சொல்லு இனியா... இனிமே எல்லாமே உன் கையில தான்நீ சொல்லுறதுல தான்...” எனக்கூறி இணைப்பை துண்டித்தான்.

விடுதி அறையின் ஜன்னல் ஓரம் படுத்தவாறு, கண்களின் ஓரம் பெருக்கெடுத்து காய்ந்த கண்ணீர் தடத்துடன் இருளுக்கு வெளிச்சத்தை புகட்ட முயன்றுக் கொண்டிருந்த சாலையோர மின்விளக்கை பார்த்தவாறு இருந்தால் அவள்... விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை நோக்கி விட்டில்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. வலதுபுறம் ராட்சதன் ஒருவன் ஆடிக் கொண்டிருப்பதை போன்று மரத்தின் நிழலொன்று மெல்ல அசைந்து கொண்டிருந்தது. இடதுபுறம் எதிரேயிருந்த சுவரில் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது... சுவரொட்டியின் பெரும்பகுதி இருளில் மூழ்கியிருந்தாலும், அதன் கீழ்பகுதியின் மீது தெருவிளக்கின் ஒளி நன்றாக பட்டு தெறித்துக் கொண்டிருந்தது... அங்கு ஏதோ எழுதப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள்... மெல்ல எழுந்து உற்றுநோக்கி அதை வாசிக்கத் தொடங்கினாள்.

சாதி தான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்” – பாபா சாகேப் அம்பேத்கர்...

யாரோ அவளது மண்டையில் சம்மட்டியால் அடித்தது போன்றதொரு உணர்வு... அவளுக்கு வாழ்வின் சாராம்சம் புரிந்துவிட்டது... வாழ்க்கையை யாருடன் பகிர்ந்து கொள்வது என விளங்கிவிட்டது... கார்த்தியின் குரலில் ஒரேஒரு வாசகம் மட்டுமே அவளது காதுகளில் இப்போது கேட்க தொடங்கியதுஎங்கயாச்சும் போயிடலாம்யாருக்கும் தெரியாத தேசமா”... ”நாங்க எதுக்கு கண் காணாத தேசமா போகனும்? நாங்க என்ன தப்பு பண்ணோம் ஓடி ஒளிய??? எனக்கு பிடிச்ச ஒருத்தன் கூட வாழனும்னு நெனைக்குறது தப்புனா, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது? அன்பின் பெயரால அடிமைதனத்தை என்னால இனிமேலும் ஏத்துக்க முடியாது... இது வந்தாரையெல்லாம் வாழ வைக்குற சென்னை... இங்க அவங்களால என்ன செஞ்சிட முடியும்? எல்லோரையும் போல எங்களயும் ஒருமூலைல சென்னை வாழ வைக்காதா என்ன?”

அவளது கண்களில் பரிபூரண பிரகாசம் - மனமெங்கும் பட்டாம்பூச்சிகள்... எதிர்காலம் மீதான நம்பிக்கை கீற்றுகள் தெளிவாய் தெரிவது போன்றதொரு உணர்வு... இனி எந்த குழப்பமும் இன்றி நிம்மதியாய் உறங்கச் செல்வாள் அவள்!!!  • கோ பிரின்ஸ்.